News details

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும்

கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததையடுத்து, 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், அரியர் தேர்வை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில், அரியர் தேர்வுக்குக் கட்டணம் செலுத்தியவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குமார் ஆதித்தன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, அரியர் தேர்வுகளை ரத்து செய்து பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ததில், தற்போது அனைத்து மாணவர்களுக்கும் தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைன் மூலமாகவோ அல்லது ஆஃப்லைன் மூலமாகவோ அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், தேர்வு நடத்தும் தேதி குறித்துப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஆலோசனை பெற்று முடிவு செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், ஏற்கெனவே தேர்வு எழுதிய மாணவர்களுக்குச் சான்றிதழ்களை விரைந்து வழங்க வேண்டும் எனவும், இந்த நடைமுறைகளை 8 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது. அரியர் தேர்வுகள் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்