News details

குழந்தைப்பேறு வழங்கும் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் (11-4-2021 பங்குனி அமாவாசை)

திருக்கடையூர் அபிராமி அன்னையை பாடும், அபிராமிபட்டர் கூட ‘கலையாத கல்வி, குறையாத வயது, கபடு வாராத நட்பு, கன்றாத வளமை, குன்றாத இளமை, கழுபிணியில்லாத உடல், சலியாத மனம், அன்பகலாத மனைவி’ என்பதோடு சேர்த்து, ‘தவறாத சந்தானம்’ வேண்டும் என்கிறார். சந்தானம் என்பது புத்திர பாக்கியத்தை குறிக்கும். எல்லாவற்றையும் சாதாரணமாக கேட்டவர், குழந்தைப்பேறு என்பதை மட்டும் தவறாமல் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டதில் இருந்தே, அதற்கான முக்கியத்துவத்தை அனைவரும் அறிந்துகொள்ள முடியும். அந்த வகையில் குழந்தைப்பேறு அருளும் திருத்தலங்கள் அதிகமாக இருந்தாலும், திருவாலங்காடு வண்டார்குழலம்மை உடனாய வடாரண்யேஸ்வரர் திருக்கோவில், முதன்மை பெற்றதாகத் திகழ்கிறது. ஏனெனில் இந்தத் திருத்தல இறைவனை வழிபட்டால், ‘மலடியும் குழந்தை பெறுவாள்’ என்கிறது, தல புராணம். திருவாலங்காடு என்ற பெயரில் இரண்டு திருத்தலங்கள் இருக்கின்றன. ஒன்று திருவள்ளூர் அருகில் உள்ள, ஈசனின் ஊர்த்தவ நடனம் நடைபெற்றதும், காரைக்கால் அம்மையார் முக்தி பெற்றதுமான திருவாலங்காடு. மற்றொன்று மயிலாடுதுறை - கும்பகோணம் வழியில் திருவாவடுதுறை அருகில் உள்ள திருவாலங்காடு. இந்த இரண்டு தலங்களிலும் உள்ள ஈசனின் திருநாமம் வடாரண்யேஸ்வரர் என்பதுதான். அதே போல் அம்பாளின் திருநாமமும் வண்டார்குழலம்மை என்பதே. இரண்டு தலங்களிலும் உள்ள எல்லை தெய்வத்தின் திருநாமமும் ஒன்றுதான். அந்த எல்லை தெய்வத்தின் பெயர், வடபத்திரகாளி அம்மன்.